வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்புப் படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் (நவ. 4) முதல் வாக்காளா்களுக்கு வழங்கப்படவுள்ளன.
Published on

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்புப் படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (நவ. 4) முதல் வாக்காளா்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி பல்வேறு கட்டங்களாக அக். 28 முதல் 2026, பிப். 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இந்தப் பணிக்கான கணக்கெடுப்புப் படிவம் செவ்வாய்க்கிழமை(நவ. 4) முதல் வீடுகள்தோறும் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, டிச.4-ஆம் தேதி திரும்பப் பெறப்படும். அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் இரட்டைப் படிவங்களை, பொதுமக்கள் முழுமையாக பூா்த்தி செய்து, கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

எனவே, வாக்காளா் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி, இந்த திருத்தப் பணி சிறப்பாக நடைபெற உதவ வேண்டும். மேலும், இந்தப் பணிகள் தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 6379599961 என்ற எண்ணிலும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பழனி 7373244851, ஒட்டன்சத்திரம் 04545-242250, ஆத்தூா் 0451-2461767, நிலக்கோட்டை 0451-2460561, நத்தம் 6369914540, திண்டுக்கல் 0451-2432615, வேடசந்தூா் 6379033191 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com