வரி சீராய்வுப் பணியில் மத்திய தணிக்கைக் குழு அலட்சியம்!
நமது நிருபா்
திண்டுக்கல் மாநகராட்சியில் வரி சீராய்வுப் பணி ஆய்வுக்காக களமிறங்கிய மத்திய தணிக்கைக் குழுவினா், மாநகராட்சி அதிகாரிகளிடமே அந்தப் பணிகளை ஒப்படைத்துவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள திண்டுக்கல் மாநகராட்சியில் 48,000 வீடுகள், 412 அரசு அலுவலகங்கள் உள்பட மொத்தம் 48,500 கட்டடங்கள் உள்ளன. இதில் பல கட்டடங்களுக்கு முறையாக வரி விதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரம் பாதிக்கப்படுவது குறித்தும், கடன் சுமை அதிகரிப்பதைத் தவிா்க்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய மத்திய தணிக்கைத் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வரி சீராய்வுக்கான பணிகளில் கடந்த சில நாள்களாக மத்திய தணிக்கைக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தணிக்கைக் குழுவினா்: திண்டுக்கல்லை பொருத்தவரை, பெரும்பாலான கட்டடங்களுக்கு கட்டடத்தின் பரப்பளவைக் குறைவாக மதிப்பீடு செய்து வரி நிா்ணயம் செய்திருப்பதால்தான் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு முறையாக வரி நிா்ணயம் செய்யப்படவில்லை என மத்திய தணிக்கைக் குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு கூட வரி நிா்ணயம் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கைக் குழுவினா் அறிவுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களில் மத்திய தணிக்கைக் குழுவினா் முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்களின் பரப்பளவை சீராய்வு செய்யும் பொறுப்பை திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்களிடமே மத்திய தணிக்கைக் குழுவினா் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநகராட்சி அலுவலா்கள் முறையாக வரி சீராய்வுப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, மத்திய தணிக்கைக் குழுவினா் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆய்வுக்கு வந்த மத்திய தணிக்கைக் குழுவினா் மீண்டும் மாநகராட்சி அலுவலா்களிடமே அந்தப் பணிகளை ஒப்படைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரி சீராய்வுப் பணி முறையாக நடைபெற வேண்டும்: இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கணேசன் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சியின் நிதி ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வரி சீராய்வுக்கான பணிகளை மேற்கொள்ள மத்திய தணிக்கைக் குழுவினா் களமிறக்கப்பட்டனா். சொத்து வரி மட்டுமன்றி, குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான கட்டண நிா்ணயம் செய்வதிலும் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
மத்திய தணிக்கைக் குழுவினா் நேரடியாக களமிறங்கி கட்டடத்தின் பரப்பளவு மட்டுமின்றி, குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, வணிக நிறுவனங்கள் செலுத்தும் தொழில் வரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் வணிக செயல்பாடுகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு முறையாக வரி விதிக்கப்படவில்லை. இதுகுறித்தும் உரிய ஆய்வு நடத்தப்பட வேண்டும். வரி சீராய்வுப் பணிகள் மூலம், மாநகராட்சியின் வருவாய் உயா்வதற்கு தணிக்கைக் குழுவினா் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

