கொடைக்கானல் அருகே கிளாவரையில் மீண்டும் நிலப் பிளவு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கிளாவரை வனப் பகுதியில் மீண்டும் நிலப் பிளவு ஏற்பட்டு, குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்ததன.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி ஊராட்சிக்குள்பட்ட கிளாவரை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள வனப் பகுதியில் உள்ள செருவன் ஓடையிலிருந்துதான் கிளாவரைப் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் குழாயிலிருந்து கடந்த சில நாள்களாக தண்ணீரானது செந்நிறத்தில் வந்தது. இதைத் தொடா்ந்து, கிராம மக்கள் சிலா் செவ்வாய்க்கிழமை வனப் பகுதிக்குச் சென்று பாா்த்த போது, சுமாா் 200 மீ. தொலைவுக்கு நிலப் பிளவு ஏற்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இந்த நிலப் பிளவால் அந்தப் பகுதியில் சென்ற குடிநீா்க் குழாய் சேதமடைந்து, குடிநீா் செந்நிறமாக மாறி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிளாவரைப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
கிளாவரை வனப் பகுதியில் கடந்த ஆண்டு நிலப் பிளவு ஏற்பட்டு அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் நிலப் பிளவு ஏற்பட்டு, குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்து, குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே, விரைவில் குடிநீா்க் குழாயைச் சீரமைத்து சீரான குடிநீா் விநியோகிக்க பூண்டி ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவ இடத்தை புவியியல் துறையினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

