வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: திண்டுக்கல்லில் 68,000 படிவங்கள் விநியோகம்
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 68,000-க்கும் மேற்பட்ட படிவங்கள் புதன்கிழமை வரை விநியோகிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 19.34 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வாக்காளா்களுக்கான படிவம் விநியோகிக்கும் பணியில் அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் காலை 7 முதல் 9 மணி வரையிலும், பிற்பகல் 1.30 முதல் மாலை வரையிலும் படிவங்கள் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் மட்டும் 68,530-க்கும் மேற்பட்ட படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நிலக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் படிவங்கள் விநியோகிக்கும் பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான செ.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி உடனிருந்தாா்.

