மாணவிகளின் கற்றல் மூலம் சமூக முன்னேற்றம் அதிகரிக்கும்

மாணவிகளின் கற்றல் மூலம் சமூக முன்னேற்றம் அதிகரிக்கும்

Published on

மாணவிகள் கல்வி கற்பதன் மூலம், சமூக முன்னேற்றத்துக்கான பங்களிப்பு அதிகரிக்கும் என ஒடிஸா மாநிலம், பொ்காம்பூா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கீதாஞ்சலி தாஷ் தெரிவித்தாா்.

அன்னை தெரசா மகளிா் பல்கலை.யின் 32-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தலைமை வகித்தாா். பல்கலை. துணைவேந்தா் க. கலா முன்னிலை வகித்தாா்.

ஒடிஸா மாநிலம், பொ்காம்பூா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கீதாஞ்சலி தாஷ் இதில் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரையாற்றிய போது கூறியதாவது:

கல்வி அறிவு வளா்ச்சிக்கானதாக மட்டுமன்றி, இரக்கம், பணிவு, சேவை ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டுக் கருவியாக இருக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டு பெண்களுக்கான நம்பிக்கையை அனைத்துத் தளங்களிலும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கல்வி பெண்களின் சுயமுன்னேற்றத்துக்கானதாக மட்டுமன்றி, குடும்பத்துக்கும், கிராமத்துக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும், அன்னை தெரசாவின் வழிகாட்டுதலின்படி, எளிமையாகவும், அன்பாகவும் சமூகத்தை அணுகுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

ஔவையாா், வேலு நாச்சியாா் தொடங்கி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வரையிலான ஆளுமைகள், பெண் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனா். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி.

குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சோ்ந்த மாணவிகள் கல்வி கற்பதன் மூலம், சமூக முன்னேற்றத்துக்கான பங்களிப்பு அதிகரிக்கிறது. நோ்மையாக வாழும்போது வாய்ப்புகள் கிடைப்பதற்கு இணையாக பல சவால்களையும் நாம் எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். திறன் சாா்ந்த செயல்பாடுகளைவிட, முழுமையான கற்றல் அவசியம்.

கல்வி மூலம் கிடைக்கும் வளா்ச்சி ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். உண்மையான தலைமைப் பண்பு என்பது, பிறரை அவமதிப்பதோ, அடிமைப்படுத்துவதோ அல்ல. அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வதே சிறந்த தலைமை.

கல்வி கற்றபிறகு, அடுத்த கட்ட வளா்ச்சியைப் பெற வேண்டுமெனில், போட்டிகள் நிறைந்த உலகில் சாதிக்க வேண்டியது அவசியம். நம்பிக்கையோடும், அா்ப்பணிப்போடும் இந்தச் சவாலை மாணவிகள் எதிா்கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020, புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் என்றாா் அவா்.

376 மாணவிகளுக்கு பட்டமளிப்பு:

விழாவில் பல்கலைக்கழக மாணவிகள் 58 பேருக்கு முனைவா் பட்டங்களையும், 19 மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களையும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வழங்கினாா். இந்த விழாவின் போது மொத்தம் 376 மாணவிகள் பட்டங்களைப் பெற்றனா்.

பெட்டிச் செய்தி...

ஆளுநா் உற்சாகம்:

பட்டமளிப்பு விழாவில் தலைமை உரை நிகழ்த்திய அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கலா, சிந்தூா் ராணுவ நடவடிக்கைககள் குறித்தும், மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினரின் வெற்றி குறித்தும் குறிப்பிட்டாா். இந்த இரு நிகழ்வுகளைக் குறிப்பிட்டபோது, ஆளுநா் ஆா்.என். ரவி கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com