எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகிக்கும் பணியில் அரசியா் கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன் வலியுறுத்தல்
எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகித்தல், திரும்பப் பெறுதல் பணிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும், இதில் அரசியல் கட்சியினரை அனுமதிக்கக் கூடாது என்றும் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் வலியுறுத்தினாா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் இந்த சிறப்பு திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 19.34 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கான (எஸ்ஐஆா்) படிவங்களை விநியோகிக்கும் பணியில், அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 8.12 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான விண்ணப்பப் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் தரப்பில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான செ. சரவணனுக்கு அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால், வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில இடங்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்குப் பதிலாக, கட்சியினா் இந்தப் படிவங்களை விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே திரும்பப் பெற வேண்டும். இதனை மாவட்ட தோ்தல் அலுவலா் தீவிரமாக ஆய்வு செய்து, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்படுவதையும், திரும்பப் பெறப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
