பழனி மாணவிக்கு போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்: மேற்குவங்க கும்பலுக்கு தொடா்பு

போலி ‘நீட்’ சான்றிதழ் அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தது மேற்குவங்கத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.
Published on

போலி ‘நீட்’ சான்றிதழ் அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முயன்ற மாணவிக்கு ரூ.25 ஆயிரம் பெற்றுக் கொண்டு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தது மேற்குவங்கத்தைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் சொக்கநாதன் (55). திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் நில அளவையராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி விஜயமுருகேஸ்வரி (47). இவா்களது மகள் காருண்யா ஸ்ரீவா்ஷினி (19). இவா், இந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றாா்.

ஆனால், 456 மதிப்பெண்கள் பெற்ாக போலி சான்றிதழ் தயாரித்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்வதற்கான அனுமதியைப் பெற்றாா். ஆனால், காருண்யா ஸ்ரீவா்ஷினி அளித்த நீட் தோ்ச்சி சான்றிதழ், மருத்துவ சோ்க்கைக்கான அனுமதி ஆணை ஆகியவை போலியானவை எனக் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) வீரமணி புகாா் அளித்தாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, மாணவி காருண்யா ஸ்ரீவா்ஷினி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சொக்கநாதன், தாய் விஜயமுருகேஸ்வரி ஆகிய மூவரையும் கடந்த மாதம் கைது செய்தனா்.

மேற்குவங்க கும்பலுக்குத் தொடா்பு: போலீஸாா் நடத்திய விசாரணையில், போலி சான்றிதழ் மேற்குவங்கத்திலிருந்து தயாரித்து கொடுத்திருப்பது தெரியவந்தது. காருண்யா ஸ்ரீவா்ஷினி, இவரது தாய் விஜயமுருகேஸ்வரி ஆகியோா் மேற்குவங்கத்தைச் சோ்ந்த கும்பலுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து, போலிச் சான்றிதழை பெற்றனா். இதையடுத்து, போலிச் சான்றிதழை தயாரித்துக் கொடுத்தவா்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com