ஒட்டன்சத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை
ஒட்டன்சத்திரம் அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வடகாடு ஊராட்சிக்குள்பட்ட சிறுவாட்டுக்காடு, புலிக்குத்திகாடு, பெத்தேல்புரம், கோமாளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்கள் வசிக்கின்றனா். இதையொட்டியுள்ள வனப் பகுதிகளில் சிறுத்தைகள், மான்கள், குரங்குகள், காட்டு மாடுகள், யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும் வாழ்கின்றன.
இந்த நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் சில நாள்களாக ஒற்றை யானை உலா வந்து இங்குள்ள மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக, ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூருக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றபோது புலிக்குத்திக்காடு அருகே ஒற்றை யானை சாலையின் நடுவில் நின்று வாகனங்களைச் செல்ல விடாமல் அச்சுறுத்தியது.
இதனால், ஒற்றை யானை வனப் பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து அதன் பிறகே அரசுப் பேருந்து சென்றது. இரவு, பகல் நேரங்களில் ஒற்றை யானை சாலையை மறித்துக்கொண்டு நிற்பதால் இந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். தொடா்ச்சியாக யானை நடமாட்டம் இருப்பதால் மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைத் தவிா்த்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, ஒற்றை யானையால் உயிா்ச் சேதம் ஏற்படும் முன்பு, அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

