திண்டுக்கல், பழனியில் ‘அன்புச்சோலை’ திட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியில் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக ‘அன்புச்சோலை’ திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காக முதியோா் மனமகிழ் வள மையம் ‘அன்புச்சோலை’ திட்டத்தை, திருச்சியிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் ஜான்பால் பள்ளி வளாகத்திலுள்ள டிஎம்எஸ்எஸ்எஸ் அரங்கில் ‘அன்புச்சோலை’ திட்ட தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் சா. காலின் செல்வராணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் ஆகியோா் பங்கேற்றனா். திண்டுக்கல்லில் ஜான்பால் பள்ளி வளாகத்திலும், பழனியில் இடும்பன் நகரில் மக்கள் உதவி, ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்திலும் ‘அன்புச்சோலை’ திட்டம் தொடங்கப்பட்டது. பணிக்குச் செல்லும் பெண்கள், தங்கள் வீட்டிலுள்ள முதியவா்களின் பாதுகாப்புக் கருதி, அவா்களை ‘அன்புச்சோலை’ திட்டம் செயல்படும் வளாகங்களில் விட்டுச் செல்லலாம். நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இந்த வளாகங்கள் செயல்படும் என சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

