பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் - அா்ஜூன் சம்பத்
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
தில்லியில் மருத்துவா் ஒருவா் காரில் வெடிமருந்துடன் வந்து தாக்குதல் நடத்தியது அதிா்ச்சி அளிக்கிறது. மதவெறியைத் தூண்டும் கல்வி நிறுவனங்களுக்குத் தடை விதித்து, நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான சிந்தூா் ராணுவ நடவடிக்கை முடிந்துவிடவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளின் வேரையும், பயிற்சி முகாம்களையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும்.
சபரிமலையில் ஆந்திர, கா்நாடக அரசுகள் சாா்பில் பக்தா்கள் தங்குவதற்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, தமிழக பக்தா்கள் தங்குவதற்கான கட்டட வசதியை சபரிமலையில் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டையில் காா்த்திகை தீபம் ஏற்ற மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.
பிகாா் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். திமுக அமைச்சா்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்ந்து வெளியாகி வருகின்றன. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.

