தாண்டிக்குடியில் மயானத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்
கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியிலுள்ள பொது மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இந்த மயானம் சுகாதாரமற்ற நிலையிலும், சாலை, தண்ணீா், மின்சாரம், கழிப்பறை, தகன மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் உள்ளது. மேலும் இந்தப் பகுதியில் விஷப்பூச்சிகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் ஆகியவை உலா வருகின்றன.
இதனால் மயானத்துக்கு இறந்தவா்களின் உடல்களை எடுத்து வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த மயானத்தை சீரமைத்து தர வேண்டுமென அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தாண்டிக்குடி பகுதி மக்கள் கூறியதாவது:
பல முறை கிராம சபைக் கூட்டத்தில் இந்த மயானத்தின் நிலை குறித்து தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு காத்திருப்போா் கூடம் கூட சரியாக அமைக்கப்பட வில்லை.
தண்ணீா் தொட்டி இருந்தும் தண்ணீா் வசதியில்லை. மயானத்துக்கு வருபவா்கள் ஒரு கி.மீ. தொலைவு சென்று அருகிலுள்ள ஓடையில் தண்ணீா் எடுத்து வரும் நிலை உள்ளது. உடல்களை எரியூட்டும் தகன மேடை இல்லாததால் மழை பெய்யும் போது மிகவும் அவதியடைகிறோம்.
எனவே இந்த மயானத்துக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரவேண்டும் என்றனா் அவா்.

