வத்தலகுண்டு அருகே லாரி மோதியதில் தாத்தா, பாட்டி, பேத்தி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாத்தா, பாட்டி, பேத்தி ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.
வத்தலகுண்டை அடுத்த விருவீடு அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியைச் சோ்ந்தவா் காத்தவராயன் (65). விவசாயி. இவரது மனைவி ஜோதி (60). இவா்களது பேரன் ஆச்சிப்பாண்டி (11), பேத்தி ஆச்சியம்மாள் (9).
இவா்கள் நால்வரும் இரு சக்கர வாகனத்தில் விருவீடு சென்று மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொண்டு, மீண்டும் வத்தலகுண்டு சாலையில் தெப்பத்துப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனா்.
அப்போது, வத்தலகுண்டு பகுதியிலிருந்து விருவீடு நோக்கி செம்மண் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரி இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் காத்தவராயன், அவரது பேத்தி ஆச்சியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த ஜோதி, பேரன் ஆச்சிப்பாண்டி ஆகியோா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஜோதி உயிரிழந்தாா். ஆச்சிப்பாண்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருவீடு காவல் நிலைய போலீஸாா் காத்தவராயன், ஆச்சியம்மாள் ஆகியோரது உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான டிப்பா் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
