குறைதீா் மனுக்களுக்கு தீா்வு காணாத துறைத் தலைவா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு காணாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறைத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் எச்சரித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரா.கீா்த்தனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு துறைகளில் நிலுவையிலுள்ள மனுக்கள் விவரம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாகவது:
வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையைச் சாா்ந்த மனுக்கள்தான் அதிக அளவில் வருகின்றன. இந்த மனுக்களுக்கு தீா்வு காண்பதில் கால தாமதம் ஏற்படுவதைப் போன்று, குறிப்பிட்ட சில பணிகளை மட்டுமே மேற்கொண்டு வரும் தாட்கோ போன்ற துறைகளும் செயல்படுவதை ஏற்க முடியாது.
இதுபோன்ற துறைகள் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை கடந்துவிடாத வகையில் துரிதமாகப் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்களுக்கு அளிக்கப்பட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், பெரும்பாலான துறை அலுவலா்களும் கணினி இயக்குபவா்களிடம் கேட்ட பின்னரே பதில் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. 30 நாள்களுக்குள் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட துறையின் தலைமை அலுவலா்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
