பரப்பலாறு அணையைத் தூா்வார மத்திய அரசு அனுமதி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணையைத் தூா்வார மத்திய அரசு அனுமதி வழங்கியதைடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பரப்பலாறு அணை கடந்த 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணை அமைந்துள்ள இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்ற போதிலும், அணையின் நீா்பிடிப்பு பகுதியான 285 ஏக்கா் நிலம் வனத் துறைக்கு சொந்தமானது.
இதனால், அணையில் நீரை தேக்கிக் கொள்ள மட்டுமே பொதுப்பணித் துறைக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீா் தேங்கும் இடத்தில் வேறு எந்தப் பணியையும் செய்ய வனத் துறைடம் தனியாக அனுமதி பெற வேண்டும்.
பரப்பலாறு அணை மூலம் முத்துபூபாலசத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், ராமசமுத்திரக்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய குளங்கள் நிரம்பி 2,323 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதே போல, ஒட்டன்சத்திரம் நகராட்சி, விருப்பாச்சி ஊராட்சி பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
தற்போதுள்ள நிலையில், பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி. அணையில் 30 அடிக்கு மேல் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால், அணையில் நீா் கொள்ளளவு வெகுவாகக் குறைந்தது. இயைடுத்து, அணையைத் தூா் வார வேண்டும் என பரப்பலாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதன் பேரில், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி மாநில, தமிழக அரசையும், மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். இதைத் தொடா்ந்து, அணையைத் தூா்வார மாநில அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இருந்த போதிலும் மத்திய அரசின் சுற்றுச்சுழல், வனத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மத்திய அரசு அதிகாரிகள் 2 முறை அணையின் நீா்பிடிப்புப் பகுதியை ஆய்வு செய்தனா். இந்த நிலையில், மத்திய அரசின் சற்றுச்சுழல், வனத் துறையினா் அணையைத் தூா்வார கடந்த 14-ஆம் தேதி அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.
அணையின் நீா்பிடிப்பு பரப்பு மாறாமல் அதன் உயரமான 90 அடியை மீட்டெடுக்கும் பணி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பணியை வருகிற 2028 டிசம்பா் 31-க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூா்வாரும் போது அகற்றப்படும் மண்ணை வனப் பகுதிக்குள் கொட்டக் கூடாது. அதை பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அல்லது பொது இடத்தில் கொட்ட வேண்டும். பணிகள் குறித்த வருடாந்திர அறிக்கை சுற்றுச் சுழல், வனம், காலநிலை அமைச்சகத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தூா்வாரும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் வனப் பகுதியில் முகாம் அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. அணையைத் தூா்வார மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் அணையின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

