தோ்தல் ஆணையத்தை குறை கூறுவது இயல்பாகிவிட்டது: பிரேமலதா விஜயகாந்த்
தோ்தல் ஆணையத்தைக் குறை கூறுவது இயல்பாகிவிட்டது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தேமுதிக திண்டுக்கல் மாநகா் மாவட்ட வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நத்தம் சாலையிலுள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் பா. மாதவன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: வாக்குச்சாவடி முகவா்கள், தோ்தல் அரசியலின் ஆணி வோ். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து, தேமுதிக கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் தயாராக உள்ளன. தொண்டா்களின் கருத்தை அறிந்த பின்னா், கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கு தேமுதிக முழு வீச்சில் தயாராக உள்ளது. இந்தத் தோ்தலைப் பொருத்தவரை, தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும். 98 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது.
ஆனால், தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்குகள் திருட்டு, நீக்கம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக தோ்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட புகாா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோ்தல் ஆணையத்தின் மீது குறை சொல்வது இயல்பாகிவிட்டது.
அதேநேரத்தில், எஸ்.ஐ.ஆா். நடவடிக்கையை முறையாகச் செயல்படுத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நோ்மையாக தோ்தல் நடைபெறுவதையும் தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆா். பணிச் சுமை என்ற அரசு ஊழியா்களின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து, கூடுதல் பணியாளா்களை நியமிக்கவும், எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் புதன்கிழமை (நவ. 19) நடைபெறும் விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்பது பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் மதுபானம், போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதற்கு திமுக அரசே பொறுப்பு என்றாா் அவா்.

