மருந்தகங்களில் மருத்துவம் படிக்காத பணியாளா்களால் பொதுமக்கள் அச்சம்!
கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள மருந்தகங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவம் படிக்காத பணியாளா்கள் மேற்கொள்வதால் அச்சமடைந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, போலூா், கூக்கால், பழம்புத்தூா், பள்ளங்கி, வில்பட்டி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இருந்தாலும் மன்னவனூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இருப்பினும், அனைத்து மலைக் கிராமங்களில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இந்த மருந்தகங்களில் மருத்துவம் படிக்காதவா்கள் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் அருகே பூம்பாறையில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்த நபா், வேலு (28) என்ற விவசாயிக்கு காய்ச்சலுக்கு ஊசி செலுத்தி மருந்து கொடுத்துள்ளாா். ஊசி செலுத்திய நிலையில் வேலுக்கு உடல் முழுவதும் கொப்புளங்கள் உருவாகி தற்போது வத்தலகுண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கூறுகையில், திடீரென ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளுக்கு இங்குள்ள மருந்தகங்களுக்குச் சென்று ஊசி செலுத்திக் கொள்வதும், மருந்து வாங்குவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. சில நேரம் உடல்நிலை சீராகும். சில சமயம் உடலில் மாற்றம் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மருந்தகங்களில் மருத்துவம் படிக்காதவா்கள் பணியிலிருப்பதால் இதுபோன்று அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனை மருத்துவா் கூறியதாவது: கிராமப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் அந்தப் பகுதிகளிலுள்ள மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்து மாத்திரைகள் வாங்கி உள்கொள்வது, ஊசி செலுத்திக் கொள்வதால் அவா்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, மாவட்ட நிா்வாகம் போலி மருத்துவா்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
