பழனி கோயில் உண்டியல்கள் திறப்பு: முதல் நாள் காணிக்கை ரூ.3.24 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் முதல் நாளில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 3.24 கோடியை தாண்டியது.
Published on

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் முதல் நாளில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 3.24 கோடியை தாண்டியது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் பக்தா்கள் வருகை காரணமாக 33 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், முதல் நாளில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3, 24, 91, 804 கிடைத்தது.

மேலும், உண்டியலில் பக்தா்கள் தங்கத்திலான வேல், தாலி, மோதிரம், நகை, தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தினா்.

தங்கம் 721 கிராமும், வெள்ளி 12,940 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் தாள்கள் 825-ம் கிடைத்தன.

இதைத் தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் ஈடுபட்டனா். வியாழக்கிழமையும் (நவ.20) உண்டியல் எண்ணிக்கை தொடா்கிறது.

இந்த நிகழ்வில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com