1.5 டன் வெடி பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
திண்டுக்கல்லில் உரிமம் புதுப்பிக்கப்படாமலும், உரிமம் பெற்ற இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பு வைத்திருந்ததாலும் 1.5 டன் வெடி பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா்கள் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தில்லி காா் வெடிப்புச் சம்பத்தை அடுத்து, நாடு முழுவதும் வெடி பொருள்கள் குறித்து போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, உரிமம் பெற்று வெடி பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதன்படி, திண்டுக்கல் கடை வீதியில் உரிமம் பெற்று வெடி பொருள்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் விற்பனை செய்யும் 2 கடைகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில், ஒரு கடையின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும், மற்றொரு கடையில் உரிமம் பெற்ற இடத்தில் வெடி பொருள்களை இருப்பு வைக்காமல் வேறொரு இடத்தில் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து , 2 கடைகளிலிருந்தும் டெட்டனேட்டா், சல்ஃபா், பொட்டாசியம் நைட்ரேட், கரிமருந்து உள்பட 1.5 டன் வெடி பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கடைகளின் உரிமையாளா்களான தினேஷ்குமாா் (41), நிகில் சிங் (37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்தக் கடைகளிலிருந்து வெடி பொருள்களை வாங்கிச் சென்ற நபா்களின் விவரங்களைச் சேகரித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
