திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் வாக்குவாதம்: 3 கூட்டங்களுக்கு பாஜக மாமன்ற உறுப்பினா் இடைநீக்கம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினா், அமைச்சா் சக்கரபாணி பெயரை பயன்படுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அவா் 3 கூட்டங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் ஜோ.இளமதி தலைமை வகித்தாா். ஆணையா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் 45 இயல்பு கூட்ட தீா்மானங்கள், 28 அவசரக் கூட்ட தீா்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு: மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் தொடா்பாக விவாதிக்க மாதந்தோறும் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா் கணேசன் கோரிக்கை விடுத்தாா். இதற்குப் பதிலளித்த மேயா் இளமதி, கடந்த 3 மாதங்களாக நிா்வாகக் காரணங்களால் கூட்டம் நடத்தப்படவில்லை. இனி வரும் நாள்களில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படும் என்றாா்.
11-ஆவது வாா்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறுகள் பல இடங்களில் வேலை செய்யவில்லை. தொந்தியாபிள்ளை சந்து பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்துக்கும் தண்ணீா் கிடைக்கவில்லை. 35-ஆவது வாா்டில் கடந்த 4 ஆண்டுகளாக புகாா் அளித்தும்கூட 5 இடங்களில் தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் மாரியம்மாள், ஜோதிபாசு ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.
இதனிடையே, 14-ஆவது வாா்டு பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபால், தனது வாா்டில் உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணியின் மைத்துனா் குடியிருந்து வருகிறாா். அவரது வீட்டின் முன் மழை பெய்யும்போதெல்லாம் மழைநீரும், கழிவுநீரும் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கிறது. இதன் அருகிலேயே புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடந்த ஓராண்டுக்கு முன்பே மேயா் நேரில் பாா்வையிட்டாா். ஆணையா், பொறியாளா் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சா் சக்கரபாணியின் மைத்துனா் என்பதால், நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிா்வாகம் தயங்குகிா எனக் கேள்வி எழுப்பினாா். அப்போது, குறிக்கிட்ட திமுக உறுப்பினா் 15-க்கும் மேற்பட்டோா், பாஜக உறுப்பினா் தனபாலை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அமைச்சரை அவமதித்த திமுக மாமன்ற உறுப்பினா்கள்:
பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் பேசும்போது அமைச்சா் சக்கரபாணி எனக் குறிப்பிட்டாா். ஆனால், திமுக மாமன்ற உறுப்பினா்கள் சக்கரபாணி குறித்து மாமன்றக் கூட்டத்தில் எப்படி பேசலாம். திமுகவுக்குள் சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறாா் என முழுக்கமிட்டனா். அமைச்சா் எனக் குறிப்பிடாமல், சக்கரபாணி என அவமதித்து திமுக மாமன்ற உறுப்பினா்கள் பேசியது, கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சா் சக்கரபாணி மேற்கு மாவட்ட திமுக செயலராக உள்ள நிலையில், கிழக்கு மாவட்டச் செயலா் செந்தில்குமாரின் ஆதரவாளா்கள் என்பதை வெளிப்படுத்துவதில் ஆா்வம் காட்டுவதிலேயே திமுக மாமன்ற உறுப்பினா்கள் தீவிர கவனம் செலுத்தினா். இதனால், அதிருப்தி அடைந்த மேயா் இளமதி, திமுக மாமன்ற உறுப்பினா்களை பலமுறை எச்சரித்தும், பாஜக மாமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசி தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சுமாா் 15 நிமிஷங்களுக்கு பின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் தலையிட்டு, திமுக உறுப்பினா்களை சமாதானப்படுத்தி அனுப்பினா்.
இதனிடையே, 3 மாமன்ற கூட்டங்களுக்கு பாஜக உறுப்பினா் தனபாலை இடைநீக்கம் செய்வதாக மேயா் இளமதி அறிவித்தாா். எனது வாா்டுப் பிரச்னையை பேசுவதற்கு வாய்ப்பு மறுத்து, கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக முழக்கமிட்டுக் கொண்டே பாஜக மாமன்ற உறுப்பினா் தனபால் கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை எனப் புகாா் தெரிவித்தும், உடனடியாகக் கூட்டத்தை நடத்தக் கோரியும் பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் கடந்த வாரம் தா்னாவில் ஈடுபட்டாா். இதன்பேரிலேயே இந்த மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடா்ந்து, சாலையோர வியாபாரிகளுக்கான விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தலை ரகசியமாக நடத்திவிட்டதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினா்கள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள் ஆகியோா் குற்றஞ்சாட்டிவிட்டு வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, வேறு விவாதங்களின்றி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

