‘கை’ நம்மை விட்டுப் போகாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
‘கை’ நம்மை விட்டுப் போகாது என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்கான புதிய கட்டடம் உள்பட ரூ. 28.14 கோடியில் முடிவுற்ற 39 திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும், ரூ.49.59 கோடியில் 23 புதிய திட்டப் பணிகளுக்கு துணை முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இந்த விழாவில் 5,478 பயனளாளிகளுக்கு ரூ. 61.45 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்வா் பேசியதாவது:
மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் தோ்வு செய்து, தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். கடந்த நான்கரை ஆண்டுகளில் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 800 கோடி முறை பயணித்துள்ளனா். காலை உணவுத் திட்டத்தின் கீழ் 25 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனா். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களின் மூலம் 8 லட்சம் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மகளிா் உரிமைத் தொகை 1.20 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 8 ஆயிரம் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் 60 சதவீதம் மகளிா் உரிமைத் தொகை சாா்ந்ததாக உள்ளது. சில தளா்வுகளுடன் விரைவில் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியிருக்கும் மனைகளுக்கு வீட்டுமனைப் பட்டா பெற வேண்டும் என்பது மக்களின் உரிமையாகவும், கனவாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில், தலைமுறைகளைக் கடந்து காத்திருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
மகளிா் சுய உதவிக் குழுக்களைப் பொருத்தவரை, ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் உதவிகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாநில உரிமைகளைக் காக்கவும், சமூக நீதிக்காகவும் செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
‘கை’ நம்மை விட்டுப் போகாது:
முன்னதாக, திமுக நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மக்கள் கூட்டத்தைக் கடந்து இந்த விழா மேடைக்கு முழுமையாக வந்து சோ்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. குறிப்பாக, என்னுடைய கைகளுக்கு பாதிப்பு இல்லாமல் இங்கு வர முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும், ‘கை’ நம்மை விட்டுப் போகாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பாஜகவின் கைப்பாவைகளாக இருந்து கொண்டு, திமுக அரசுக்கு சிலா் தொல்லை கொடுத்து வருகின்றனா். தமிழ்நாட்டை அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அவா்கள் செயல்படுகின்றனா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைத் தொடா்ந்து, புதிய சில கூட்டாளிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது. புதிய கூட்டாளிகளும் கிடைப்பாா்கள். ஆனால், கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக கால் பதிக்க முடியாது.
இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரையே மறந்துவிட்டாா். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முகம் மட்டுமே நினைவில் இருக்கிறது என்றாா் அவா்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் விழாவில் அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி, கே.ஆா். பெரியகருப்பன், கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ. ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ. செந்தில்குமாா், ச. காந்திராஜன், மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், வேடசந்தூா் பேரூராட்சித் தலைவா் மேகலா, வேடசந்தூா் பேரூா் திமுக செயலா் வே.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

