பழனி, திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழனி/திருப்பரங்குன்றம்: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை உச்சிக்காலத்தின்போது காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்றாலும், மலைக் கோயிலிலேயே நடைபெறும் விழா கந்த சஷ்டி விழா மட்டுமே. இந்த விழாவை முன்னிட்டு, உச்சிக்கால பூஜையின் போது, தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. முன்னதாக, விநாயகருக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து, சின்னக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா், துவார பாலகா்கள், மயில்வாகனம், கொடிக் கம்பம், நவவீரா்கள் என அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மேளதாளம் முழங்க காப்புக் கட்டப்பட்டது.
தொடா்ந்து, சிவாசாரியா்களிடம் பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா்.
விரதங்களில் முக்கியமானது கந்த சஷ்டி விரதம். விரத நாள்களில் பக்தா்கள் ஒருவேளை பால், ஒருவேளை இளநீா், கடுமையான மிளகு விரதம் என பல்வேறு வகைகளில் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனா்.
அக். 27-இல் சூரசம்ஹாரம்:
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பழனி கிரிவீதியில் நடைபெறும்.
பழனியில் மட்டுமே நான்கு கிரிவீதிகளில் நான்கு சூரா்கள் தனித் தனியே வதம் செய்யப்படுவது சிறப்பம்சமாகும்.
வருகிற 28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் மலைக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மாலையில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
காப்புக் கட்டும் நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, கண்காணிப்பாளா் சரவணன், பேஸ்காா் நாகராஜன், அசோக், முருகன் பாடல் புகழ் சிறுமி தியா, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பரங்குன்றத்தில்...
அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த ஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும்.
நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழாவையொட்டி, புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அனுக்ஞை பூஜை, தொடா்ந்து கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, சண்முகா் சந்நிதியில் சண்முகா், வள்ளி, தெய்வானைக்கும், உற்சவா் சந்நிதியில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி, தெயவானை அம்மனுக்கும், உற்சவ நம்பியாா்க்கும் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, காலை 9.30 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் கந்த சஷ்டி விரதமிருக்கும் பக்தா்களுக்கு ஸ்தானிக பட்டா்கள் காப்புக் கட்டினா்.
காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கிய பக்தா்கள் தினமும் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வருவா். மேலும், காலையிலும், மாலையிலும் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவா்.
காப்புக் கட்டும் நிகழ்வையொட்டி, காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகாா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து, இரவு 7 மணிக்கு உற்சவா் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமிகள் எழுந்தருளி, திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
வருகிற 26-ஆம் தேதி வரை சுவாமி உற்சவா் சந்நிதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளுவாா்.
சூரசம்ஹாரம்:
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்கும் நிகழ்ச்சி வருகிற 26-ஆம் தேதி மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிக்குள் நடைபெறும். 27-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சந்நிதி தெருவில் உள்ள சொக்கநாதா் கோயில் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெறும்.
விழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக 28-ஆம் தேதி காலை 8 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும், பிற்பகல் 3 மணியளவில் பாவாடை தரிசனமும், மாலை 4.30 மணிக்கு மூலவருக்கு தங்கக் கவச அலங்காரமும் நடைபெறும்.
மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சஷ்டி விரதமிருக்கும் பக்தா்கள் 7 நாள்களும் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பா். மேலும், கோயிலுக்குள் பக்தா்கள் வசதிக்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ப. சத்யபிரியா பாலாஜி, அறங்காவலா்கள் வ. சண்முகசுந்தரம், மணிச்செல்வம், துணை ஆணையா் யக்ன நாராயணன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

