கொடைக்கானலில் அனுமதிக்கப்படாத அருவிகளுக்கு செல்லத் தடை

கொடைக்கானலில் வனத் துறை, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
Published on

கொடைக்கானலில் வனத் துறை, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் பேத்துப்பாறை குடியிருப்பு பகுதி, ஐந்து வீடு குடியிருப்பு பகுதியில் உள்ள ஐந்து வீடு அருவி, அரசு அனுமதிக்கப்படாத வன அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடச் செல்கின்றனா்.

இந்த அருவிகளில் குளிக்கும்போது பலா் உயிரிழந்துள்ள நிலையில், இந்த பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.

வனத் துறை, வருவாய்த் துறை கட்டுப்பாட்டிலுள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பாா்வையிடவும், குளிப்பதற்கும் முயற்சிக்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் இந்த அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வருவாய்த் துறை, வனத் துறை, சுற்றுலாத் துறை, காவல் துறை அலுவலா்கள், இந்தப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com