பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம்: திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: முன்னாள் எம்எல்ஏ லாசா்

பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை
Published on

பேரூராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் துணைத் தலைவருமான ஏ. லாசா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் துணைத் தலைவா் ஏ. லாசா் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள், மாவட்டத் தலைவா் என். பெருமாள், எம். ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பல்வேறு வகை புறம்போக்கு இடங்களைக் கண்டறிந்து விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

பஞ்சமி, பூமிதான கூட்டுப் புறம்போக்கு நிலங்களில் அனுபவத்திலுள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வசதி படைத்த ஆக்கிரமிப்பாளா்களைக் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும். குத்தகை விவசாயிகளின் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசு வழங்கும் மானியம், சலுகைகளை குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத் துணைத் தலைவா் ஏ.லாசா் கூறியதாவது: பல தலைமுறைகளாக இனாம் (மைனா்) நிலம், மானிய நிலம், கோயில், மடம், அறக்கட்டளை, வக்ஃப் இடங்களில் அடிமனையில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கும் அறநிலையத் துறை சட்டப் பிரிவு 34-இன்படி சொந்தமாக்கி பட்டா வழங்க வேண்டும்.

வன உரிமைச் சட்டம் 2006-இன் படி கொடைக்கானல், பண்ணைக்காடு, சிறுமலை வன நிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கும், வன நிலங்களில் பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கும் நிலப் பட்டா வழங்க வேண்டும். திண்டுக்கல் சுற்றுச் சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு, 2013-ஆம் ஆண்டு நிலமெடுப்பு சட்டத்தின்படி மறுமதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இதே போல, பேரூராட்சி உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளிலும், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com