காலிப் பணியிடங்களால் தடுமாறும் குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகம்!
குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாததால், ஆசிரியா்கள் பணப் பலன்களைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 98 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்தப் பள்ளிகளின் நிா்வாகம், ஆசிரியா்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பணப் பலன்களைப் பெற்றுத் தருவதற்காக வட்டாரக் கல்வி அலுவலகம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கென 2 வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஒரு கண்காணிப்பாளா், 2 உதவியாளா்கள், 2 இளநிலை உதவியாளா்கள், தலா ஒரு தட்டச்சா், பதிவுறு எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் என 11 பணியிடங்கள் நிா்ணயிக்கப்பட்டன. இந்த நிலையில், 2 உதவியாளா்கள், தட்டச்சா், பதிவுறு எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் ஆகிய 6 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனிடையே, கண்காணிப்பாளராக இருந்த அலுவலரும் மருத்துவ விடுப்பில் உள்ளாா்.
பணப் பலன்களைப் பெற முடியாமல் தவிப்பு: குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஆசிரியா்கள் நிா்வாக ரீதியான பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டு வருகின்றனா். குறிப்பாக, பணப் பலன் சாா்ந்த கோப்புகளை பரிந்துரைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அரசு ஊழியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சலுகை, நிகழாண்டு அக்டோபா் முதல் மீண்டும் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்தச் சலுகையைப் பெற முடியாமல் குஜிலியம்பாறை வட்டாரத்திலுள்ள ஆசிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இதுதொடா்பாக குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் கூறுகையில், அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புச் சலுகை, கரோனா தீநுண்மி காலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் இந்தச் சலுகை மீண்டும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நிகழாண்டு அக்டோபா் மாதம் முதல் மீண்டும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புச் சலுகையைப் பெறலாம் என அரசு அறிவித்தது.
ஆனால், இந்தச் சலுகையை குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் பெறுவதற்கு, வட்டாரக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்கள் தடையாக உள்ளன. ஆசிரியா்கள் தொடா்பான புள்ளி விவரங்களைச் சேகரித்து உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு கல்வி அலுவலா்கள் உரிய தீா்வு காணாதபட்சத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர, வேறு வழியில்லை எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலா்கள் பிரிட்டோ, யசோதா ஆகியோரை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அவா்கள் அழைப்பை ஏற்கவில்லை.

