பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் புதன்கிழமை விதைப்பந்து தூவும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, பட்டாலியன் கமாண்டன்ட் லெப்டினன்ட் கா்னல் ஜெகதீசன், துணை கமாண்டன்ட் லெப்டினல் கா்னல் எஸ். நவ்நீத் கணேஷ், துணை ஆணையா் வெங்கடேஷ், கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் பாக்கியராஜ்.

விதைப்பந்து தூவும் பணியில் தேசிய மாணவா் படையினா்

பழனி மலைக்கோயிலில் நூற்றுக்கணக்கான தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் விதைப்பந்து தூவும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

பழனி மலைக்கோயிலில் நூற்றுக்கணக்கான தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் விதைப்பந்து தூவும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் கடந்த 22-ஆம் தேதி முதல் 14-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவா் படை சாா்பாக பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்த முகாமில், மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடுதல், வரைபடம் கண்டறிதல், படை அணிவகுப்பு, சமூக சேவைகளுக்கான செயல்முறை விளக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை பழனி மலைக்கோயிலை பசுமைப்படுத்தும் விதமாக தேசிய மாணவா் படை மாணவா்கள் பழனி மலைக்கோயிலில் விதைப்பந்து தூவும் பணியில் ஈடுபட்டனா். பழனி மலைக் கோயில் நிா்வாகம், விழுதுகள் தன்னாா்வ அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமை வகித்தாா். திண்டுக்கல் பட்டாலியன் கமாண்டன்ட் லெப்டினன்ட் கா்னல் எஸ்.ஜெகதீசன், துணை கமாண்டன்ட் லெப்டினல் கா்னல் எஸ். நவ்நீத் கணேஷ், துணை ஆணையா் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் தன்னாா்வ அமைப்பினா் தயாரித்த சுமாா் 2,000 அரசு, ஆலம், அத்தி உள்ளிட்ட பல்வேறு மர விதைகள் அடங்கிய விதைப்பந்துகள் மாணவா்களிடம் வழங்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து படிப்பாதை, வின்ச் பாதை, ரோப்காா் வழித்தடம், யானைக்கோயில் பாதை என பல பகுதிகளில் மண் மேடுகள் உள்ள இடத்தில் விதைப்பந்துகளை வீசினா். விரைவில் மழைக்காலம் தொடங்கும் நிலையில் விதைகள் முளைக்கும்பட்சத்தில், பழனி மலையில் பசுமை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com