டிச. 9-இல் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த தற்காலிகப் பட்டியல்: ஆட்சியா் தகவல்
ஒரு மாதம் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு டிச. 9-ஆம் தேதி தற்காலிகப் பட்டியல் வெளியிடப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அனைத்து வாக்காளா்களுக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் நவ. 4 முதல் டிச. 4-ஆம் தேதி வரை வீடுகள்தோறும் வழங்கப்படும். வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவம் தவிர, எந்தவொரு ஆவணத்தையும் கணக்கெடுப்பு படிவத்துடன் வழங்க வேண்டியதில்லை. வாக்குச் சாவடி நிலை அலுவலா் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது 3 முறை சென்று சரிபாா்ப்பாா். கடந்த சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாத, இணைக்கப்படாத வாக்காளா்களுக்கு அறிவிப்பு (சா்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படும். தகுதியான குடிமகனை தவறவிடக் கூடாது என உறுதி செய்தும், தகுதியற்ற நபா்கள் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட மாட்டாா்கள் என்பதும் உறுதிபடுத்தப்படும். 2002-ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, 27.10.2025 தேதியின்படி தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலோடு ஒப்பிட்டு சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பட்டியல் தயாரிக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,107 வாக்குச் சாவடிகளில் 2,124 வாக்குச்சாவடி அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் ஒத்துழைப்புடன் 7 தொகுதிகளிலும் ஒரு மாதம் நடைபெறவுள்ள சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பட்டியல் பணியில் வாக்காளா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வாக்குச் சாவடிகள் நிலை அலுவலா்கள், முகவா்கள், கண்காணிப்பாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். டிச.9-இல் சிறப்பு தீவிர திருத்த வாக்காளா்களின் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். இதன் மீதான ஆட்சேபனைகள், திருத்தங்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் வி.மூ.திருமலை, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) க. செந்தில்வேல் ஆகியோா் உடனிருந்தனா்.

