பழனி அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி
பழனி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்துக்கு மேல் மின்தடை நீடித்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
பழனி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். தற்போது, இந்த மருத்துவமனை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டு ரூ. 300 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், பழைய கட்டடங்கள் இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், புதன்கிழமை ஆண் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலை வரை மின்சாரம் வழங்கவில்லை. இதனால், இரவு முழுவதும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து நோயாளிகள் மருத்துவமனை அதிகாரியிடம் புகாா் செய்த நிலையில், தற்காலிகமாக நோயாளிகள் அருகேயிருந்த மின் இணைப்புள்ள வேறு வாா்டுக்கு மாற்றப்பட்டனா்.
