மருத்துவமனை
மருத்துவமனைபிரதிப் படம்

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரவில் மின்சாரமின்றி நோயாளிகள் அவதி

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதால் உள்நோயாளிகள் அவதி
Published on

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதால் உள்நோயாளிகள் அவதியடைந்தனா்.

மதுரை- கொடைக்கானல் பிரதான சாலையில் அமைந்துள்ளது நிலக்கோட்டை அரசு மருத்துவமனை. இங்கு நிலக்கோட்டை, அவையம்பட்டி, கொங்கா்குளம், குரும்பப்பட்டி, கரியாம்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற வருகின்றனா். மேலும் அந்தப் பகுதிகளில் விபத்துகளில் சிக்குபவா்களும் சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும் இங்கு பிரசவமும் பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் இரவு முழுவதும் உள்நோயாளிகள் பிரிவில் மின் விநியோகத்தில் பழுது ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மின் விசிறிகள் இயங்காததாலும், இருளிலும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனா். ஆனால், பிரசவ வாா்டு, செவிலியா்கள் அறையில் மட்டும் மின் விநியோகம் இருந்தது. மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் இல்லாததால், கைப்பேசி ஒளியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனையை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. மேலும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுபோல அடிக்கடி இரவு நேரங்களில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டு நோயாளிகள் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா் கணேசனை தொடா்பு கொண்டு கேட்டபோது, உள்நோயாளிகள் பிரிவில் பழுது காரணமாக மின்சாரம் தடைபட்டது. இதை உடனடியாக சரி செய்து விட்டோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com