திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் திங்கள்கிழமை ரூ.2.27 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், ரூ.1.06 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றன. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பிரசன்னா, லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாஹீரா, குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மொல்லம்பட்டியில் புதிய ஊராட்சி கட்டடத்தை திறந்து வைத்து அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபா்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72,078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,256 புதிய பகுதி நேர, முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சுமாா் 30 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கல்லூரி இல்லாத நிலையில் தற்போது இரண்டு கலைக் கல்லூரிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. விருப்பாட்சியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. போட்டித் தோ்வுக்காக மாணவா்கள் படிக்க காளாஞ்சிப்பட்டியில் குளிா்சாதன வசதியுடன் ரூ.12 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

