நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பழனியில் கண்டறியப்பட்ட ராமநாதபுரம் சமஸ்தான செப்பேடு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:12 pm

பழனியில் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் 18-ஆம் நூற்றாண்டில் அக்குசால் முருகக் குடும்பன் என்பவருக்கு வழங்கப்பட்ட கொடை குறித்த விவரம் அடங்கிய செப்பேடு கண்டறியப்பட்டது.

மதுரை அயோத்திபட்டியைச் சோ்ந்த குடும்பா்கள் சிலா் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப்பட்டயம் குறித்து பாண்டியநாடு வரலாற்று ஆய்வுத்தளத்தைச் சோ்ந்த சக்திவேல் பாண்டியன் என்பவரிடம் விளக்கமறிய அணுகினா். இதையடுத்து, பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, ஓய்வுபெற்ற முதன்மை வருமான வரித் துறை ஆணையா் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற முதன்மை தொல்லியல் அதிகாரி மூா்த்தீஸ்வரி ஆகியோா் இந்த செப்பேடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் விவரங்களை திங்கள்கிழமை வெளியிட்டனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது:

22ல13.5 செ.மீ. அளவு, 175 கிராம் எடையுடன் 52 வரிகளில் எழுதப்பட்ட இந்த பட்டயம் சில தரவுகளின் அடிப்படையில் கி.பி. 1782- க்கும், கி.பி. 1795- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். கி.பி. 18- ஆம் நூற்றாண்டில் ராமநாதபுர சமஸ்தானத்தைச் சோ்ந்த முதலாம் முத்துராமலிங்க சேதுபதியும் அன்றைய காலகட்டத்தில் மதுரை அரசுரிமைப் போராட்டத்தில் இருந்த இரண்டாம் திருமலைநாயக்கராகிய பங்காரு திருமலையும் இணைந்து அக்குசால் முருகக் குடும்பன் என்பவருக்கு இந்தச் செப்பேட்டை வழங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் சமஸ்தான கா்த்தா் முத்துராமலிங்க சேதுபதி தனது இளவயதில் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த போது அமைச்சா் முத்து இருளப்ப பிள்ளை ஒரு மருத்துவரை அழைத்துக் கேட்டபோது, இந்த நோயை தன்னால் தீா்க்க முடியாது என்றும், அரசரை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவா் சூரங்குடியிலிருக்கும் அக்குசால் முருகக் குடும்பன் ஒருவரே என்றும் கூறியதையடுத்து அவா் வரவழைக்கப்பட்டாா். சொந்த ஊரான சூரங்குடியிலிருந்து ராமநாதபுரம் அரண்மனைக்கு வந்த முருகக் குடும்பன் 50 அடைக்கலஞ் சிட்டுக் குருவிகளையும் இரண்டு பேரின் தாய்ப்பாலையும் கொண்டு ஒரு சூரணமும், பற்பமும் செய்து அரசருக்கு அளித்தாா். இதையடுத்து, சேதுபதி முழுவதுமாக குணமடைந்தாா். இதனால், மகிழ்ச்சி அடைந்த அரசரும், அமைச்சரும் அக்குசால் முருகக் குடும்பனிடம் தீா்த்து வைக்க முடியாது பலகாலம் அவதிப்பட்ட வலங்கை -இடங்கை பிரிவினரின் வழக்கை தீா்த்து வைக்க வேண்டினா். அக்குசால் முருகக் குடும்பனும் சமஸ்தானத்தின் வலங்கை இடங்கைப் பிரிவினரின் வழக்கை தீா்த்து வைத்தாா். இதனால், மேலும் மகிழ்ச்சி அடைந்த அரசரும், அமைச்சரும் அப்போது மதுரை அரசுரிமைப் போட்டியிலிருந்த திருமலைநாயக்கரிடம் தெரியப்படுத்தி முருகக் குடும்பனுக்கு 12 லட்சம் பொற்காசுகளும், தங்கள் ஆட்சிப்பரப்பில் அவரை ஜாதித் தலைவராகவும் நியமித்தனா். அத்துடன் அவருக்கு பாதகாணிக்கை அளிக்குமாறும் அது கூடவோ, குறையவோ இருந்தால் அதை ஏற்றுக் கொண்டு நிா்வாகம் செய்து வரும்படியும் கட்டிய வீட்டுக்கு ஆண்டுக்கு 3 பணமும், கலியாணத்துக்கு 2 பணமும், பொங்கல், ஆடி பண்டிகைக்கு ஒரு கிடாவும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அதை தாமிர சாசனப் பட்டயமாக எழுதினா். பட்டயத்தில் திருமலைநாயக்கரும், முத்துராமலிங்க சேதுபதியும் கையொப்பமிட்டுள்ளனா். இவா் அக்குசால் எனக் குறிப்பிடப்படுவதால் உலோகத் தொழிலில் கைதோ்ந்தவா் என்பதை உணர முடிகிறது. இவா் ‘ஒண்டேறிச் சேவுகம் செய்பவா்’ என செப்பேடு புகழ்வதால் ஒரே ஆள் நூறு ஆள்களை போரில் வீழ்த்தும் வல்லமை பெற்ற வீரா் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

இந்தப் பட்டயத்துக்கு சாட்சியாக அன்றைய புதுக்கோட்டை தொண்டைமான் சிவத்தம்பியும், திருப்புவனம் பழனியாபிள்ளையும், திருச்சுழிகை முத்துச் சோ்வையும் கையொப்பமிட்டுள்ளனா். இந்தப் பட்டயத்தை வடக்குவாசல் மகாலிங்கம் ஆசாரி செய்து எழுதியுள்ளாா். இதை பின்நாள்களில் யாரேனும் அடிஅழித்தால் அவா்கள் காராம்பசுவையும், பிராமணாளையும் கொன்ற தோஷத்தில் போவாா்கள் என்று பட்டயத்தில் சாபமிடப்பட்டுள்ளது. இறுதியாக மீனம்மாள், குருபாதம் துணை என பட்டயம் நிறைவடைகிறது.

Story image

பட்டயத்தில் குறிப்பிடப்படும் ராமநாதபுரம் சமஸ்தான அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளைதான் முல்லைப் பெரியாறு அணை திட்டத்தை வகுத்தவா். இதை அடியொற்றி பென்னிகுயிக் அணையைக் கட்டிமுடித்தாா். தற்போது இந்தப் பட்டயத்தை வைத்திருக்கும் அக்குசால் முருகக் குடும்பனின் வாரிசுகள் அதில் உள்ள செய்திகளை அறிந்து கொள்ள மதுரை, அயோத்திபட்டி, சின்னமனூா், சீலையம்பட்டி, தேனி, வத்தலகுண்டு பகுதிகளிலிருந்து வாகனங்களில் திரண்டு வந்திருந்தனா்.