திமுக செயற்குழு கூட்டம்
பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பொதுமக்களுக்கு கிடைப்பதை திமுகவினா் உறுதிப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் இ.பெரியசாமி தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அர.சக்கரபாணி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் திமுக வேட்பாளா்களை வெற்றி பெற வைத்து, மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க திமுகவினா் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பொதுமக்களுக்கும் கிடைப்பதை திமுகவினா் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ச.காந்திராஜன், மேயா் இளமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
