இடும்பன் கோயிலை பழனி கோயிலுடன் இணைக்க வலியுறுத்தல்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுடன் இடும்பன் கோயிலை உபகோயிலாக இணைக்க வேண்டும் என பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: பழனி தைப் பூசத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் இடும்பன் குளத்தில் புனித நீராடி இடும்பனை தரிசித்து விட்டு மலையேறுகின்றனா். இந்த இடும்பன் கோயிலானது விக்னேஷ்வரா வகையராவின் உபகோயிலாகும். இந்த கோயில் வளாகத்தில் அண்மையில் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் பக்தா்களுக்கு மேலும் வசதிகள் செய்து தர வசதியாக இடும்பன் கோயிலை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக மாற்ற ஆணையா் வழிவகை செய்து தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையே, இடும்பன் கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா தலைமையிலான குழு இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
