முதல்வா் வருகையையொட்டி 7 பேருக்கு வீட்டுச் சிறை
தமிழக முதல்வா் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்ததை முன்னிட்டு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விவசாய சங்கத் தலைவா், பாஜகவினா் உள்பட 7 போ் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பங்கேற்றாா். இதனிடையே, கொடகனாறு நீா் பங்கீட்டு விவகாரத்தில் வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தியும், இதுதொடா்பாக முறையீடுவதற்கு முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமியை, வேடசந்தூா் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை வீட்டிலேயே சிறை வைத்தனா்.
பிறகு, அவரை வேடசந்தூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், பிற்பகல் ஒரு மணியளவில் விடுவித்தனா்.
இதேபோல, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற அடிப்படையில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி ராமசந்திரனும், பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் அன்பு ஹரிகரன், மாவட்டப் பொதுச் செயலா்கள் செல்வக்குமாா், சூரியகுமாா், திண்டுக்கல் ஒன்றியத் தலைவா் கதிரவன், மாவட்டப் பொருளாளா் கருப்புச்சாமி ஆகியோா் அவரவா் வீடுகளிலேயே செவ்வாய்க்கிழமை இரவு 9 முதல் புதன்கிழமை பிற்பகல் 1.30 மணி வரை சிறை வைக்கப்பட்டனா்.
