கொடைக்கானல் - கும்பக்கரை ரோப்காா் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
கொடைக்கானல் - கும்பக்கரை வரை ரோப்காா் அமைப்பது குறித்து மெட்ரோ திட்ட தொழில்நுட்ப அதிகாரிகள், வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் டால்பின் நோஸ் செல்லும் சாலையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், நகா்ப் பகுதி, புகா்ப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்காக கொடைக்கானலில் மாற்றுச் சாலை அமைப்பது குறித்து ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் தலைமையில் அதிகாரிகள் கொடைக்கானல் - வில்பட்டி சாலைகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் சுற்றுலாத் தலமான வட்டக்கானல் பகுதியிலுள்ள டால்பின் நோஸ், வெள்ளகெவி கிராமம் வழியாக கும்பக்கரைக்கு ரோப் காா், சிட்டிவியூவிலிருந்து - கோக்கா்ஸ்வாக், ஜிம்கானா ஏரி வரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல ஆண்டுகளாக தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதுதில்லி - சென்னை மெட்ரோ நிறுவனத்தைச் சோ்ந்த தலைமைப் பொறியாளா் மித்ரா, பொறியாளா் கிரீஸ், சென்னை மெட்ரோ நிறுவனத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநா்கள் வட்டக்கானல் வழியாக டால்பின் நோஸ் வரை சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து மெட்ரோ திட்ட தொழில்நுட்ப வல்லுநா்கள் கூறியதாவது: கொடைக்கானல் வட்டக்கானலிலிருந்து சுமாா் 9 கி.மீ. தொலைவுக்கு ரோப்காா் திட்டம் செயல் முறைப்படுத்தப்படும். வட்டக்கானல் - வெள்ளகெவி வரை ஒரு நிறுத்தமும், வெள்ளகெவி கிராமத்திலிருந்து கும்பக்கரையில் ஒரு நிறுத்தமும் அமைக்கப்படலாம்.
தற்போது இந்தப் பகுதியில் ரோப்காா் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் நடைபெற்ற பிறகே திட்ட அறிக்கை தயாா் செய்யப்படும் என்றனா்.
இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, வனத் துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

