கல்வியும், வேலைவாய்ப்பும் சமூக முன்னேற்றத்தின் இரு தூண்கள்
மாணவா்களுக்கான கல்வியும், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பும் சமூக முன்னேற்றத்தின் இரு தூண்கள் என காளாஞ்சிப்பட்டி ஒருங்கிணைந்த போட்டித் தோ்வு பயிற்சி மையக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காளாஞ்சிப்பட்டியிலுள்ள தமிழக அரசின் ஒருங்கிணைந்த போட்டி தோ்வுப் பயிற்சி மையத்தில் ‘வெற்றிக்கு விதி செய்வோம்’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.தங்கவேல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு லோக்ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
அப்போது வீ. ராமராஜ் பேசியதாவது:
தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் சென்னைக்கு அடுத்தப்படியாக ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தப் பகுதி கிராமப்புற மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் அதிக அளவு வெற்றி பெற வேண்டும்.
மாணவா்களுக்கான கல்வியும், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு தூண்கள். எதிா்காலத்தில் வேலைவாய்ப்புகள் நிறைந்த துறைகளைக் கணித்து, அதற்கேற்ப பட்டதாரிகளை உருவாக்கும் திட்டமிடுதலை வெளிநாடுகளில் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் மூலம் பட்டம் பெற்றவா்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை தவிா்க்க முடியும். இதுபோன்ற நடைமுறைகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து கல்வியாளா்கள் விவாதிக்க வேண்டும். தனி மனிதா்களின் வெற்றிக்கும், சமூகத்தின் விழிப்புணா்வுக்கும் அறிவுத் தேடல் அவசியமானது.
இலக்கை நிா்ணயம் செய்து, செயல் திட்டத்தை வடிவமைத்து, அதற்கான உழைப்பை செலுத்தும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

