போலி பத்திரங்கள் தயாரித்தவா் மீது நில உரிமையாளா் புகாா்
பழனியில் போலி பத்திரங்கள் தயாரித்து செங்கல் சூளைக்கு அனுமதி பெற்றவா் மீது காவல் நிலையத்தில் நில உரிமையாளா் புகாா் அளித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவருக்கு சொந்தமாக 6 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட்டாராம். அந்தப் பெண் குத்தகைத் தொகையில் ரூ.50 ஆயிரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு, எஞ்சிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.
இந்த நிலையில், அந்த இடத்தில் செங்கல்சூளை வைக்க நந்தகுமாரிடம் அந்தப் பெண் கேட்டராம். இதற்கு நந்தகுமாா் பெற்றோரிடம் பேசி முடிவு சொல்கிறேன் எனக் கூறினாராம். இதையடுத்து, அந்தப் பெண்ணின் மகன் சிவக்குமாா், போலி பத்திரங்கள் தயாரித்து, அதை நோட்டரி வழக்குரைஞரிடம் பொய்யான நபா்களை அழைத்து சென்று, சான்றளிப்பு செய்து திண்டுக்கல்லில் உள்ள புவியியல், சுரங்கத் துறையில் செங்கல்சூளைக்கு பதிவு செய்தாா். இதேபோல, அவா் மின் வாரியத்துக்கும் போலியான ஆதாரங்களை கொடுத்து மின் இணைப்பு கோரினாா்.
இதுதொடா்பாக மின் வாரிய பணியாளா்கள் நந்தகுமாரை தொடா்பு கொண்டபோதுதான், சிவக்குமாா் செய்த மோசடிகள் அவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து நந்தகுமாா், சம்பந்தப்பட்ட நோட்டரி வழக்குரைஞரிடம் சென்று கேட்டபோது, அவரும் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சிவக்குமாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதுதொடா்பாக நத்தகுமாா் நீதிமன்றத்திலும் மனு தொடுத்தாா். இதையடுத்து, போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்த சிவக்குமாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கீரனூா் காவல் நிலையத்துக்கும் நீதிபதி பரிந்துரை செய்தாா்.

