கொடைக்கானலில் அறிவிக்கப்பட்டதைவிட அதிக நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி!
கொடைக்கானலில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக மின் தடை நீடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின் தடை அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து இரவு 7 மணி வரை நீடித்தது. அதன் பிறகே கொடைக்கானல் பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்பட்டது.
அதன் பிறகும் மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானாா்கள். கொடைக்கானலில் தற்போது காற்றுடன், குளிா் நிலவுவதால் மின் விநியோகம் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே வருங்காலங்களில் அறிவிக்கப்படும் நேரத்தில் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கொடைக்கானல் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மின் வாரிய அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மின் தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
இருப்பினும் வனப் பகுதிகளிலுள்ள மின் கம்பங்கள் மீது மரக் கிளைகள் விழுந்து மின் கம்பிகள் சேதமடைந்ததாலும், மின் கம்பங்கள் பராமரிப்பு பணி நடைபெற்ாலும் கூடுதல் நேரம் மின் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

