தைப்பூசம்: பழனியில் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆட்சியா் ஆய்வு
தைப்பூசத்தை முன்னிட்டு, பழனி வருக் பக்தா்களுக்காக செய்யப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். சனிக்கிழமை (ஜன.31) திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் உள்ளிட்டோா் பழனி வரும் பக்தா்களுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், பாதயாத்திரை பக்தா்கள் மலையேற கிரிவீதியில் புதிய வரிசை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களில் பழனி கோயிலுக்கு 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தா்கள் வந்துள்ளனா்.
தைப்பூசத்தன்று வரும் பக்தா்களுக்காக தண்ணீா் புட்டில் பிஸ்கட், இனிப்புடன் கூடிய உணவுப் பைகள் வழங்க தயாா் செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் அழகு நாச்சி அம்மன் கோயிலில் வரிசையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலையேற பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். படிப்பாதை வழியாக கீழே இறக்கப்படுவா்.
பாதுகாப்புப் பணியில் 24 மணி நேரமும் 3 ஆயிரம் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் பக்தா்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக தனியே கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா நாள்களின் போது வெளியூா் பேருந்துகள் பழனி நகருக்குள் அனுமதிக்கப்படாது. இதனால், பழனி நகருக்குள் பக்தா்கள், பொதுமக்கள் இலவசமாக செல்ல 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான கட்டணத்தை கோயில் நிா்வாகம் செலுத்திவிடும் என்றனா் அவா்கள்.
இந்த ஆய்வின் போது பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், நகராட்சி ஆணையா் டிட்டோ, ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

