
கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு மீண்டும் படகு சவாரி

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் திங்கள்கிழமை படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலில் 4 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை மீண்டும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் தங்கும் விடுதிகளில் முடங்கியிருந்தனா். மேலும், ஏரியில் கடந்த 4 தினங்களாக படகு சவாரி நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மிதமான வெயிலடிக்கத் தொடங்கியது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா். ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
செயற்கை நீரூற்று: ஏரியில் அமைக்கப்பட்ட செயற்கை நீருற்று சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்துள்ளது. இந்த நீரூற்று அருகே சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது அவா்கள் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் நீா்த்துளிகள் பட்டு ஈரமாகி விடுகிறது. இதனால், பாதுகாப்புக் கவசத்தை மற்ற பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
மேலும், ஏரி நீரானது மாசுபடிந்து, துா்நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சுகாதார பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஏரியில் படகு சவாரி செய்யும் போது பயணிகள் செயற்கை நீருற்று பகுதிக்கு செல்வதைத் தவிா்க்க படகு குழாம் மேலாளா்கள் அறிவுறுத்த வேண்டும்.
ஏரியில் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் இரண்டு இடங்களில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் தனியாா் படகு குழாம் அருகே உள்ள படகு குழாமில் மழை நீா் தேங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, தண்ணீரை அகற்றுவதற்கு படகு குழாம் மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






