வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் நிலையம் அருகே

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் மாலையணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர்.
  மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாநகர அவைத் தலைவர் கே.துரைப்பாண்டியன் தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்தனர். பொருளாளர் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தார். காளவாசல் பகுதியில் இருந்து பெரியார் நிலையம் வரை அவருக்கு வழிநெடுக கட்சியினர் வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்களுடன் வந்து அவர் மரியாதை செலுத்தினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் தங்க தமிழ்ச்செல்வன், மாநகர் மாவட்டச் செயலர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.
  மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் புதூர் கே.பூமிநாதன் தலைமையில்  நிர்வாகிகள் அழகுசுந்தரம், மகபூப் ஜான் உள்ளிட்ட பலர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீ.கார்த்திகேயன், நாயுடு மகாஜன சங்க நிர்வாகிகள் சுருதி ரமேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கே.ராஜபாண்டியன், இணைச் செயலர் பொன் சங்கர், நிர்வாகிகள் முருகன், கண்ணன்,ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக - அமமுக வாக்குவாதம்: கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தபோது, அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வந்து கொண்டிருந்தார். அப்போது அமமுகவினர், அதிமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதையடுத்து அதிமுகவினரும் எதிர் கோஷம் எழுப்பினர். இருதரப்புக்கும் வாக்குவாதம் ஆனது. அங்கிருந்த போலீஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் சற்றுநேரம் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com