மதுரை, மேலூர், உசிலம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த

மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 30 சிலைகள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மதுரை நகரின் பல்வேறு இடங்களில்  320 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து இளைஞர் சேனா, இந்து மகா சபா ஆகிய அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த 30 சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வாகனங்களில் ஏற்றி கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோயில் முன்பாக கொண்டு வரப்பட்டன. அங்கு மாலை 4 மணிக்கு ஊர்வல தொடக்க விழா நடைபெற்றது. 
விழாவுக்கு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை எம்.கண்ணன் தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் பாம்பன் பாலன் சுவாமி ஆசியுரை வழங்கினார். தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனர் கே.சி.திருமாறன் வாழ்த்தி பேசினார். விசர்ஜன ஊர்வலத்தை இந்து இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார் தொடக்கி வைத்தார். ஊர்வலத்தின் முன்பாக போலீஸார் அணிவகுத்துச்சென்றனர். விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றுக்கும் நான்கு போலீஸார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர். ஊர்வலம் சென்ற நான்கு மாசி வீதிகளிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 
ஊர்வலம் செல்லும் பாதைகளில் வாகனப்போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டிருந்தது. கல்பாலம் அருகே வைகையாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். 
மேலூர்: இந்து மகா சபா சார்பில் மேலூர் நகர் மற்றும் கிராமங்களில் 2 அடி முதல் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் மேலூரில் உள்ள காமாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முன்பு எடுத்துவரப்பட்டன. மேலூர் தொழிலதிபர் கணேசன் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். இந்து மகா சபா மாநிலச் செயலர் பெரி.செல்லத்துரை முன்னிலை வகித்தார். மதுரை மாவட்டத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். கோயில் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம் சந்தைப்பேட்டையைஅடைந்து அங்கிருந்து, பெரியகடைவீதி, செக்கடி பஜார், மேலூர் பஸ் நிலையம் வழியாக அழகர்கோவில் சாலை மண்கட்டித் தெப்பக்குளத்தை வந்தடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் அனைத்தும் நீரில் விடப்பட்டன. 
  உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எழுமலையில் 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த விநாயகர் சிலைகள்  ஊர்வலம் எழுமலையிலுள்ள ராஜகணபதி கோயிலில் இருந்து துவங்கியது. ஊர்வலம் உசிலம்பட்டிசாலை, கிருஷ்ணன் கோயில் தெரு, பகவதியம்மன்கோயில் தெரு, கடைவீதி, புல்லுக்கட்டை மைதானம், தேவர் சிலை தெரு வழியாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக அவுல் அரிசி வழங்கப்பட்டது.
      அதன் பின்னர் எழுமலை பெரிய கண்மாயில் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்திற்கு உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com