ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தம் குறித்தும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு (ஜே.பி.சி)

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தம் குறித்தும் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு (ஜே.பி.சி)  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
     பிரான்ஸிடம்  இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு  மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில்  ஊழல் நடந்துள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் மதுரையில் காங்கிரஸ் கட்சியினர்  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
  மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  காங்கிரஸ்  கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர்கள் டி.ரவிச்சந்திரன், ஆர்.ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறியது:
    முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது 126 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.560 கோடியில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இந்திய நிறுவனத்தின் மூலம் இந்த விமானங்கள் தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால்,  தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் கூடுதல் தொகைக்கு அதாவது  36 விமானங்களை தலா ரூ.1600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. அதோடு இந்த ஒப்பந்தம் குறித்து,  இரு அவைகளிலும் விவாதிக்க மறுக்கிறது. 
    ராணுவ தளவாடங்கள் கொள்முதலில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் தலையீடு அதிகமாக இருக்கிறது. ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் தவறு இல்லையெனில்,  இரு அவைகளிலும் விவாதம் நடத்த தயங்குவது ஏன் எனத் தெரியவில்லை. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்றார்.
    பின்னர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். 
  ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தும் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com