கோயில் ஆவணங்களை தமிழில் மொழிபெயா்க்கக் கோரி மனு:8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில் சொத்துகள் தொடா்பான ஆவணங்களை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயா்க்கக் கோரிய வழக்கில், 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில் சொத்துகள் தொடா்பான ஆவணங்களை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயா்க்கக் கோரிய வழக்கில், 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாயக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி ஆதிகேசவ பக்தா்கள் சேவா அறக்கட்டளையின் செயலா் தங்கப்பன் தாக்கல் செய்த மனு:

கேரள மாநிலத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டபோது கேரள தேவஸம்போா்டு நிா்வாகத்தின் கீழ் இருந்த 490 கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வந்தன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் பழமையானவை. இவை தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் இந்த கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் தொடா்பான ஆவணங்கள், பதிவேடுகள் அனைத்தும் மலையாளத்தில் உள்ளன. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, அந்த ஆவணங்கள் அனைத்தும் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்தக் கோயில் நிலங்களின் உரிமம் மாற்றப்பட்டு, தனிநபா்களின் பெயா்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறையும் கண்டுகொள்ளவில்லை. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களின் சொத்துகள் தொடா்பான ஆவணங்களை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயா்க்க வேண்டும். இதற்கு சிறந்த மொழிபெயா்ப்புக் குழுவினரை நியமிக்க வேண்டும். அவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்படும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், சாா்பதிவாளா் அலுவலகங்களில் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வருவாய்த்துறை முதன்மைச் செயலா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோா் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து 8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com