"கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்'

கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் மு.க.  ஸ்டாலின் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் மு.க.  ஸ்டாலின் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
மதுரை ஒத்தக்கடையில் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி 2019" பாஜக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது: நாம் வரும் போது சூரியன் மறைந்து விடுகிறது. பாஜக வரும்போது தென்றல் வீசுகிறது. தற்போது பாஜக காற்று வீசுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றபின் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 
ராகுல் காந்தியும், ஸ்டாலிலும் நாங்கள் வந்தால், அதை செய்வோம், இதை செய்வோம் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கு அந்த கவலை வேண்டாம், அவர்கள் வரப் போவதில்லை. வைகோ உள்ளிட்டவர்களின் கருப்புக் கொடி போராட்டம் வெற்றுப் போராட்டம். ஆனால், நமது போராட்டம், வெற்றிப் போராட்டம். காங்கிரஸ் கட்சித் தலைவராக கே. எஸ். அழகிரி பொறுப்பேற்றவுடன், கமல் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கூறியவர். திமுகவின் மிரட்டல் காரணமாக கமலை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், பாஜக அப்படி யாரையும் மிரட்டுவது கிடையாது.  
காமராஜர் ஆட்சியைப் போல  ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம் என திருப்பூர் கூட்டத்தில் மோடி எடுத்துரைத்ததையடுத்து காங்கிரஸ் கட்சியினர், காமராஜரை பற்றி மோடி பேச என்ன தகுதி உள்ளது எனக் கேட்கின்றனர். காமராஜரைப் பற்றி பேச, மோடியைத் தவிர வேறு யாருக்கு தகுதி உள்ளது. தமிழகத்துக்கு பாஜக அரசைப் போல யாரும் திட்டங்களை கொண்டு வரவில்லை. அதனால் பாஜக கூட்டணி  தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றிப் பெறும்.
பாஜக ஆட்சியில் பெண்களுக்கான பல்வேறு நல்ல  திட்டங்களை கொடுத்து வருகிறோம். பெண் குழந்தை என்றால் பயந்து வாழ்ந்தது போய், தற்போது மத்திய அரசின் திட்டத்தால் பாய்ந்து வளர்த்து வருகின்றனர். தற்போது நாட்டில் 70 சதவீதம் மக்கள் மீண்டும் மோடி தான் பிரதமராக வர வேண்டும் என விரும்புகின்றனர் என்றார். கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலர் பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்டாலின் நாடகம்: பொதுக்கூட்டத்துக்கு பின்னர் அவர் அளித்தப் பேட்டி:
  ரஜினி தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். பாஜக பற்றி அவர் எந்த கருத்தும் கூறவில்லை.  தற்போது தண்ணீர் பிரச்னையை தீர்க்க பாஜக தலைமையிலான அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஜினி ஏற்கெனவே கூறியதுபோல் பல பேர் எதிர்ப்பதால் மோடி தான் பலசாலி.  ரஜினி ரசிகர்கள், அரசியல் தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று. 
   திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி தமிழர்கள் பெருமைப்படும் வகையில் இருக்கும்.  பிப்ரவரி 22ஆம் தேதி அமித் ஷா மதுரை வருகிறார். பின்பு ராமநாதபுரம் செல்கிறார். ஸ்டாலின் தற்போது கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த நாடகம் மக்களிடம் எடுபடாது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com