அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தனித்தனி குழுக்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை  அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவற்கு  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் வழக்குரைஞர்கள்

மதுரை  அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்துவற்கு  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் வழக்குரைஞர்கள் மற்றும் அனைத்து சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் 19 பேர் கொண்ட  விழாக் குழுவையும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த 35 பேர் கொண்ட குழுவையும்  நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில்,  மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நிகழாண்டு ஜனவரி 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில், மற்றொரு தரப்பினர் சார்பில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை. யாரையும் கலந்தாலோசிப்பதில்லை.  தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிகட்டை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர்  உடனடியாக ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து பிறபகல் 1 மணிக்கு  மூவரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதையடுத்து, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றமே ஆணையர் குழுவை அமைக்கும் என்றும், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் நீதிபதிகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.
இதில், குழுவுக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமை வகிப்பார் என்றும்,  வழக்குரைஞர்கள் 3 பேர்,  உள்ளூர் அனைத்து சமுதாய பிரமுகர்கள் 16 பேர் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், முடிவெடுக்கும் உரிமை நீதிபதிக்கு மட்டுமே  உள்ளது. விழாவில் குழுவினருக்கோ அல்லது யாருக்குமோ முதல் மரியாதை செய்யக்கூடாது.
நீதிமன்றம் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி  குழுவினருடன்தான் விழாக் கமிட்டியினர் நன்கொடை வாங்கச் செல்ல வேண்டும். இதுதொடர்பாக ஜனவரி 21ஆம் தேதியன்று விடியோ ஆதாரத்துடன் அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
அலங்காநல்லூர்: இதேபோன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனு விவரம்: அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு கமிட்டியில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே உள்ளனர். எனவே அனைவரையும் இணைத்து, ஜல்லிக்கட்டு விழாக் குழு அமைத்து  நடத்த வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். 
இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு வெள்ளிக்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது,  24 பேர் கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டியை  அனைத்து கட்சி மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 35 பேர் கொண்ட கமிட்டி ஆக அமைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையில் சரவணன், திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் ஆகிய 3 வழக்குரைஞர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்துள்ளது. மேலும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேரை கொண்ட ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏ.கே. கண்ணன், பெரியசாமி, ராமசாமி,  மாயாண்டி, பாக்கியத்தேவர், கருப்பையா, பிச்சை,  சொக்கேஷ், அன்பரசன்,  இளஞ்செழியன், திருமலைராஜன், செல்வகுமார், முனியசாமி, கல்யாணசுந்தரம்,  சுப்பிரமணியன், கார்த்தி ஆகிய 16 பேரும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஆலோசனைக் குழுவினர், ஜல்லிக்கட்டு மேடையை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும். 
ஆலோசனைக் குழுவுக்கு என தனித்த அதிகாரம் ஏதுமில்லை. மண்டல வருவாய் அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்குத்  தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். 
ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று எந்த சமூகத்துக்கோ அல்லது காளைக்கோ முதல் மரியாதை உள்ளிட்டவை வழங்கப்படக்கூடாது. பரிசுப் பொருள்கள் மற்றும் அதற்கான தொகையை யாரும் தன்னிச்சையாக வசூலிக்கக்கூடாது. மூன்று வழக்குரைஞர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் தனித்தனியே வாகன வசதி செய்துதர வேண்டும்.
ஒருங்கிணைப்புக் குழுவினரே, பரிசுப் பொருள்கள், தொகை உள்ளிட்டவற்றை வசூலிக்க வேண்டும். அதுதொடர்பான கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்வில் அரசியல் கட்சி மற்றும் சமூகம் தொடர்பான கொடி மற்றும் தலைவர்களின் விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது.
பரிசுப் பொருள்கள், தொகை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் மட்டுமே வழங்க வேண்டுமென துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com