மேலூரில் மாட்டு வண்டிப் பந்தயம் மீண்டும் நடத்தப்படுமா? "ரேக்ளா' ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்த, மேலூர் மாட்டுவண்டி எல்கைப்  பந்தயத்தை மீண்டும்

பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்த, மேலூர் மாட்டுவண்டி எல்கைப்  பந்தயத்தை மீண்டும் நடத்தவேண்டும் என ரேக்ளா பந்தய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 மதுரை மாவட்டம் மேலூரில் ஆண்டுதோறும்  பொங்கல் பண்டிகையையொட்டி தை மாதம்  4-ஆம் தேதி மேலூர்- மதுரை சாலையில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தை தங்கஜெயபாலன் தலைமையிலான ரேக்ளா ஆர்வலர்கள் நலச்சங்கம் நடத்தி வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தமிழக சுற்றுலாத்துறையினர் அழைத்துவந்து இப்பந்தயத்தைப் பார்வையிட ஏற்பாடுகளைச் செய்தனர். 
  மேலும் அவர்கள் தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கும் வகையில் சுற்றுலாத்துறையினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தனர். மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழா, பாரம்பரிய கலைவிழா,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகியவற்றைத் தொடர்ந்து, மேலூர் ரேக்ளா பந்தயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து மேலூருக்கு வருவது வாடிக்கையாக இருந்து வந்தது.
 கடந்த 2001-இல் திமுக ஆட்சி நடைபெற்றபோது ரேக்ளா ஆர்வலர்கள் சங்கத் தலைவர் தங்கஜெயபாலன் மேலூர் நகர திமுக செயலரானார். இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் படங்களுடன் மாட்டு வண்டி பந்தயத்துக்கு விளம்பரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர். இதே போன்று, 2002-இல் ரேக்ளா பந்தயம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, துண்டுப் பிரசுரங்களில் அப்போதைய மேலூர் தொகுதி சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் ஆர்.சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பெயர்கள்  இடம்பெற்றிருந்தன. இதற்கு அதிமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்தவர் நடத்தும் நிகழ்ச்சியில் தங்களது பெயர்களை சேர்க்கக்கூடாது என்றனர். இதுகுறித்து, மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரேக்ளா பந்தயம் நடத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறிய அதிமுகவினர் தங்கள் பெயர்களுடன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளதால் வேறு ஒரு நாளில் பந்தயத்தை நடத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். 
ஆனால், குறித்த நாளில் பந்தயம் நடைபெறும் என தங்கஜெயபாலன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்துக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. 
 இந்நிலையில், மீண்டும் மாட்டு வண்டிப்பந்தயத்தை நடத்த வேண்டும் என ரேக்ளா பந்தய ஆர்வலர்கள் மற்றும்  சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com