பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி  மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.  

பொள்ளாச்சி  மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.  
பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விடியோ பதிவு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்குரைஞர்கள், மாதர் அமைப்புகள், இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை பெண் நீதிபதி தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்.  
பொள்ளாச்சி சம்பவத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டம் குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான போலீஸார் கல்லூரிக்குச்சென்று வாயிற் கதவுகளை பூட்டி மாணவர்களை வெளியே வர விடாமல் தடுத்தனர். 
இதையடுத்து மாணவர்கள் போலீஸாரின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்து கோஷங்கள் எழுப்பி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர். 
இதே போல அழகர் கோவில் சாலையில்  உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி,  செளராஷ்டிரா கல்லூரி, யாதவர் கல்லூரி  உள்பட பல்வேறு 
கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மாணவர்களின் போராட்டத்தையடுத்து மதுரையில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பாகவும் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com