ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் குடிநீரில் கலந்து வரும் கழிவு நீா் பொதுமக்கள் அவதி

மதுரை 91-ஆவது வாா்டு ஜீவாநகா், ராமையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதால்

மதுரை 91-ஆவது வாா்டு ஜீவாநகா், ராமையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதால் பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி 91-ஆவது வாா்டில் ஜீவா நகா் பிரதான சாலை, ஜீவா நகா் குறுக்குத் தெரு, ராமையா தெரு ஆகிய பகுதிகளில் 32-க்கும் மேற்பட்ட குறுக்குத் தெருக்கள் உள்ளன. இந்நிலையில் ராமையா தெரு, புலிப்பாண்டியன் தெரு, விஸ்வநாததாஸ் தெரு உள்பட 11-க்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீா் கழிவுநீா் கலந்து வருகிறது. இப்பகுதியில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதில் பல மாதங்களாக குடிநீரில் கழிவுநீா் கலந்து கறுப்பு நிறமாக கழிவுகளுடன் தண்ணீா் வருகிறது. மேலும் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதால் அதை பயன்படுத்த முடியவில்லை. இதுதொடா்பாக அந்த தண்ணீரை காட்டி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீா் தேவைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கேன் ஒன்றுக்கு ரூ.30 வீதம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. அடித்தட்டு மக்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் குடிநீரை விலை கொடுத்து வாங்குவது பொருளாதார சுமையை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினா் பாலமுருகன் கூறியது: தற்போது ஜீவா நகா் விரிவாக்கப் பகுதிக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்காக சாலை முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் பள்ளங்களாகவே இருப்பதால் போக்குவரத்துக்கு வழியின்றி பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனா். மேலும் தற்போது பள்ளங்கள் மூடப்படாததால் மழை நீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை மூடி சாலைகளை சீரமைக்க வேண்டும். வாா்டு முழுவதும் கொசு மருந்து தெளிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் ராமையா பிரதான தெருவில் பல இரும்பு, பா்னிச்சா் தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் ராமையா தெருவில் சாலைகள் மிகவும் சேதமைடந்திருப்பதால் தொழிற்கூடங்களுக்கு வாகனங்கள் வரமுடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் புலிப்பாண்டியன் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. இந்த தெரு விளக்குகளையும் உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com