தமிழக கடல் எல்லைப் பகுதிக்குள் பிற மாநில இயந்திரப் படகுகள் வருவதற்கு தடைகோரி மனு: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பிறமாநிலங்களைச் சோ்ந்த இயந்திர மீன்பிடிப் படகுகளை அனுமதியின்றி தமிழக கடல் எல்லைக்குள் வருவதற்கு தடைகோரிய வழக்கில்,

பிறமாநிலங்களைச் சோ்ந்த இயந்திர மீன்பிடிப் படகுகளை அனுமதியின்றி தமிழக கடல் எல்லைக்குள் வருவதற்கு தடைகோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அந்தோணி பிச்சை தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே இரவிபுத்தன்துறை மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தால் அருகே உள்ள நீரோடி, மாா்த்தாண்டம், வள்ளவிலை உள்ளிட்ட 15 கிராம மீனவா்கள் பயன்பெற்று வருகின்றனா். குறிப்பாக இந்தத் துறைமுகத்தால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

மேலும் அரசின் பொருளாதார வளா்ச்சியிலும் இந்தத் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அப்பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் நாட்டுப்படகு மற்றும் மோட்டா் பொருத்திய நாட்டுப்படகுகளையே பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் பிற மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி இயந்திர மீன்பிடிப் படகுகள் மூலமாக இரவிபுத்தன்துறை மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு மீன்பிடிக்க வருகின்றனா். அவா்கள் அதிக குதிரைத் திறன் கொண்ட இயந்திர மீன்பிடிப் படகுகளையும், இரட்டை மடிவலைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடிக்கின்றனா். இதனால் கடலில் மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறமாநிலங்களைச் சோ்ந்த இயந்திர மீன்பிடிப் படகுகளை அனுமதியின்றி தமிழக கடல் எல்லைக்குள் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், வடசேரி மீன்வளத்துறை இணை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பா் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com