மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்துமிட பணிகள்: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
By DIN | Published On : 04th April 2019 07:24 AM | Last Updated : 04th April 2019 07:24 AM | அ+அ அ- |

மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் கட்டுமானப் பணிக்கு பள்ளம் தோண்டும் போது 60 அடி நீள சுற்றுச் சுவர் புதன்கிழமை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு சீர்மிகு நகர்த்திட்டத்தின்கீழ் ரூ.4 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிட பணிகள் தொடங்கியுள்ளன. இதில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் இதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புதன்கிழமை பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 40 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தின் அருகே இருந்த 60 அடி நீள சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் கட்டுமானப்பணியை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.